4/14/2013

முஸ்லிம் சமூகம் பிளவுபட்டது கருத்திலா, அமலிலா?


முஸ்லிம் சமூகம் பிளவுபட்டது கருத்திலா, அமலிலா?

முஸ்லிம் சமூகத்தில் அழகான கருத்துக்களைப் பேசலாம் எழுதலாம். அவற்றை “அவசியம்” என்று கருதுபவர்கள் செவிமடுத்துவிட்டு அல்லது வாசித்துவிட்டுப் போவார்கள். ஏனையோர் அவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது அழகான, அற்புதமான கருத்துக்களுக்கு எமது சமூகம் கொடுக்கும் அந்தஸ்தும் மரியாதையுமாகும்.

இதே நேரம் செய்யும் அமல்களில் ஒரு சிறிய மாற்றத்தை உட்படுத்திப் பாருங்கள். மஸ்ஜிதின் நான்கு சுவர்களும் நடுங்க ஆரம்பிக்கும், இதுதான் எமது சமூகத்தின் யதார்த்தம்.
தொழுகை நடத்துபவர் ஸூரத்துல் பாதிஹாவிற்கு முன்பு “பிஸ்மில்லாஹ்” வை சப்தமிட்டு ஓதாமலிருக்கட்டும் அல்லது சுபஹுத் தொழுகையில் குனூத் ஓதாமலிருக்கட்டும் அல்லது தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்தவுடன் துஆ ஓதாமல் எழுந்து செல்லட்டும் அல்லது ஜனாஸாவை ஷஹாதத் கலிமா சொல்லாமல் சுமந்து செல்லட்டும் அல்லது ஜனாஸாவை மஸ்ஜிதில் வைத்து விட்டு அனைவரும் தொழுகைக்கு வந்து சேரும் வரை ஸூரத்துல் இக்லாஸை ஓதாமலிருக்கட்டும் அல்லது ரமழானில் இருபது ரகஅத்துக்கள் இரவுத் தொழுகையை சிறிது குறைத்துத் தொழுதுவிடட்டும் அல்லது பெருநாள் தொழுகையை திறந்த வெளியில் தொழுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யட்டும் அல்லது பெருநாள் குத்பாவை ஒரு குத்பாவாக நிறைவேற்றட்டும்...
அல்லது மேற்கூறப்பட்டவற்றை இதுவரை சொன்ன அமைப்பிலன்றி அதற்கு நேர் எதிராக மாற்றிச் செய்யட்டும்.
இத்தகைய அமல்களை செய்வதில்தானே எமது சமூகம் பிளவுபட்டுப் போனது! அந்தப் பிளவுகள் முஸ்லிம் சமூகத்தையும் இஸ்லாத்தையும் எதிர்ப்பவர்களின் வாய்க்கு இன்று அவலாகியிருப்பதையும் நாம் காண்கிறோம். சம்பிரதாய முஸ்லிம்கள் என்றும் தீவிரவாத முஸ்லிம்கள் என்றும் எம்மை எதிர்ப்பவர்கள் எம்மை வேறுபடுத்தி கூறுபோட முயற்சிப்பதற்கு இடமளித்தவர்கள் எமது எதிரிகளல்லர். அமல்கள் செய்வதில் பிளவுபடுட்டுக் கொண்ட முஸ்லிம்களே!


இது பழங்காலக் கதையல்ல.
இன்று நாம் எதிர்நோக்கியிருக்கின்ற அசாதாரண சூழலில்கூட முஸ்லிம்கள் இவ்வாறுதான் நடந்து கொள்கிறார்கள். காரணம், நாங்கள் செய்யும் அமலே சரியானது ஏற்புடையது அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படக்கூடியது. ஏனையோர் செய்யும் அமல்கள் பிழையானவை நபிகளாரின் சுன்னாவுக்கு மாற்றமானவை நிராகரிக்கப்படவேண்டியவை என்ற நிலைப்பாடுகளோடு நாம் அமல் செய்ததாகும்.

இந்த வரலாற்றை நாங்கள் இனி மீட்டக் கூடாது மீட்ட முயலவும் கூடாது. எமது இந்த வரலாறுதான் நாம் இன்று எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையின் பல்வேறு முகங்களில் ஒன்றைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

சில அமல்களால் நேற்று நாம் பிளவுபட்டிருந்தோம். இன்று வேறு சில அமல்கள் எங்களைப் பிளவுபடுத்துமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

நேற்று எங்களைப் பிளவுபடுத்திய அமல்கள் (உண்மையில் அமல்கள் பிளவுபடுத்துவதில்லை அமல்களால் நாம் பிளவுபட்டோம் என்பதே சரி) எங்களது உள்வீட்டுப் பிரச்சினையாக இருந்தது. இன்றைய அமல்களோ நாட்டின் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில் நாம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பிளவை ஏற்படுத்தி இடைவெளிகளைத் தூரமாக்கினால் எமது எதிரிகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதாக அது அமைந்துவிடும். இப்போதே எங்களது அமல்களை வைத்து எங்களை சம்பிரதாய முஸ்லிம்கள் என்றும் திவிரவாத முஸ்லிம்கள் என்றும் பிரித்து எமக்கிடையில் பிளவை உண்டுபண்ணவும் இடைவெளியை அதிகரிக்கச் செய்யவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். நாமும் நேற்றுப்போல் இன்றும் இடைவெளிகளை விரிவாக்கினால் எமது புதைகுழிகளை எமது கைகளால் தோண்டுவது போன்றதாகிவிடும்.
உண்மையில் இடைவெளி கூடுவது எதனால்?
ஓர் அமலை பல கோணங்களில் பார்ப்பவர்களும் நடைமுறைப்படுத்துபவர்களும் இருப்பதனாலா? அல்லது ஓர் அமலை ஒரு கோணத்தில் மாத்திரம் விளங்கி அந்த நடைமுறை மாத்திரமே சரி ஏனைய அனைத்தும் பிழை அவற்றை அனைவரும் விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்துவதனாலா?
ஓர் அமலை ஒரு கோணத்தில் விளங்கி அதனை அவ்வாறு மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும்போதுதான் மாற்றுக் கோணத்தையுடையவர்கள் தூரமாகிறார்கள். இந்த அணுகுமுறை மாற்றுக் கோணத்தையுடையவர்களைக் குறைந்தபட்சம் தர்ம சங்கடத்திற்குள்ளாக்குகிறது. இணைந்து வேலை செய்வதில் நம்பிக்கை இழக்கின்ற நிலையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.


முன்னெப்போதுமில்லாத ஓர் அசாதாரண சூழலை இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில் இத்தகையதொரு தர்ம சங்கடம், நம்பிக்கை இல்லாத நிலை, இடைவெளி அதிகரித்தல் போன்ற அசௌகரியங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஏற்படாமல் சமூகத் தலைமைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அமல்கள் மீண்டும் எங்களைப் பிளவுபடுத்திவிடாமல் நாங்கள் முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் எமது சமூகம் உள், வெளிச் சக்திகள் இரண்டாலும் பாதிப்படைவதைத் தவிர்க்க முடியாது போகலாம். அல்லாஹ் அவ்வாறானதொரு சூழல் ஏற்படுவதற்கு வழிவிடாமல் சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பாளர்களை நெறிப்படுத்துவானாக!

இந்த உண்மையை எடுத்துக் கூறுகின்றபோது பின்வருமாறு ஒரு வினா எழ முடியும்.
தற்போதைய அசாதாரண சூழலில் ஓர் அமலை அனைவரும் ஒரே விதமாகச் செய்யுமாறு வலியுறுத்துவதுதானே சரி அதுதானே சமூகத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி! அதனை விடுத்து ஓர் அமலை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகச் செய்வதற்கும் அது பற்றிப் பேசுவதற்கும் விட்டுவிடுதல் எப்படி சரியான முடிவாக இருக்கலாம்?

உதாரணமாக, முஸ்லிம் எதிர்ப்பு சக்திகள் “நிகாப்” ஐ ஒரு பிரச்சினையாக மாற்றியிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் “நிகாப்” பற்றி அனைவரும் ஒரு கருத்தைக் கூறி ஒரு நடைமுறையை மாத்திரம் வலியுறுத்துவதுதானே சரியான முடிவாக இருக்கும் அதுதானே சமூகத்தைப் பாதுகாக்கும்! இன்றைய சூழ்நிலையில் இந்த ஒற்றுமையை விடுத்து “நிகாப்” பற்றி வேறுபட்ட நடைமுறைகளையும் கருத்துக்களையும் கொண்டிருப்பது எப்படி சமூக ஒற்றுமையாக இருக்க முடியும்?

வெளிப் பார்வைக்கு இந்த விவாதம் சரியானது போலத் தெரிந்தாலும், கருத்து வேறுபாடுள்ள எந்த ஓர் அமலையும் கடந்த 1400 ஆண்டுகளாக முஸ்லிம் சமூகம் ஒரே அமைப்பில் செய்ததாக வரலாறு இல்லை. ஓர் அமல் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களும் நடைமுறைகளும் எல்லாக் காலங்களிலும், ஏன் நபித் தோழர்களின் காலத்திலும்கூட இருந்தே வந்திருக்கின்றன. மாறாத சில அடிப்படைகள் மட்டும்தான் எல்லாக் காலங்களிலும் மாற்றம் பெறாமலே இருந்து வந்திருக்கின்றன.
உதாரணம்: ஒரு நாளையில் ஐவேளை தொழுதல் என்பதும் ஒவ்வொரு தொழுகைக்குமான ரக்அத்துக்கள் எத்தனை என்பதும் மாறாதவையாகும்.

“நிகாப்” இந்த வகையைச் சார்ந்தது அல்ல. அதில் வேறுபட்ட கோணங்களும் நடைமுறைகளும் இருக்கின்றன. மார்க்கம் அனுமதித்த இத்தகைய நடைமுறைகளில் ஒரு கோணத்தை மாத்திரம் வலியுறுத்தி மற்றையது பிழை என்று கூறுவதுதான் சமூகத்தில் பிளவை உண்டுபண்ணுமே தவிர, பல கோணத்தை உடையவர்கள் இருப்பது பிளவை உண்டுபண்ணாது. அதாவது ஓர் அமலை இஸ்லாம் அனுமதித்த வேறுபட்ட அமைப்புகளில் செய்வதும் பேசுவதும் பிளவை உண்டுபண்ணாது.
கடந்த காலங்களிலும் நடந்தது இதுதான். எட்டு ரகஅத் தொழுபவர்கள் எட்டு தொழுததும் இருபது ரகஅத்துக்கள் தொழுபவர் இருபது தொழுததும் பிளவை உண்டுபண்ணவில்லை. ஒன்று சரி மற்றையது பிழை என்று வலியுறுத்த முயற்சித்ததனால்தான் பிளவு ஏற்பட்டது.

இதனால்தான் அமல்களில் முஸ்லிம் சமூகம் பிளவுபடாமல் இருக்கும் வகையிலான ஒரு நிலைப்பாட்டை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது ஒற்றுமைப் பிரகடனத்தில் வலியுறுத்துகிறது. அந்த நிலைப்பாட்டோடு சமூகத்தை வழிநடத்தினால் அமல்கள் செய்பவர்கள் அனுமதிக்கப்பட்ட பல கோணங்களில் அவற்றை செய்துவிட்டுப் போவார்கள். சிலபோது சிலர் அனுமதிக்கப்படாதவற்றையும் செய்வார்கள். எனினும், அவர்களைத் திருத்துவதற்காக சமூகத்தைப் பிளவுபடுத்த வேண்டிய அவசியம் உருவாக மாட்டாது.

அந்த நிலைப்பாடு இதுதான்:
“அமல்கள் தொடர்பாக வந்துள்ள பிக்ஹு சட்டங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை நாமும் அனுமதிப்பதோடு, அத்தகைய கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தை மாத்திரம் வரிந்து கட்டிக் கொண்டு இயக்கமாக அந்தக் கருத்தைப் பிரசாரம் செய்வதும் அந்தக் கருத்துக்கு உடன்படாதவர்களை விமர்சிப்பதும் அந்தக் கருத்தை நியாயப்படுத்தி விவாதிப்பதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். இத்தகைய கருத்துக்களில் ஒரு கருத்துக்கு ஆதரவாக சமூகத்தின் ஓர் உறுப்பினர் அமல் செய்யும்போது மற்றுமோர் உறுப்பினர் மற்றொரு கருத்துக்கமைவாக அமல் செய்யலாம். அது மட்டுமல்ல, தான் மட்டுமே சரி ஏனைய அனைவரும் பிழை என்ற நிலைப்பாட்டுக்கு வராமல் தனது கருத்தை எழுதவும் பேசவும் சமூகம் அவருக்கு சுதந்திரம் வழங்க வேண்டும். ஆக, அமல்கள் தொடர்பான பிக்ஹு சட்டங்களில் வரும் கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தை ஓர் உறுப்பினர் பேசும்போது அல்லது எழுதும்போது அந்தக் கருத்து அவரது கருத்தாக இருக்குமே தவிர ஒரு இயக்கத்தின் கருத்தாக இருக்க மாட்டாது இருக்கவும் கூடாது. இயக்கமொன்று அந்தக் கருத்துக்காக வரிந்து கட்டிக் கொண்டு சர்ச்சைகளில் ஈடுபடவும் கூடாது.”

இத்தகைய நிலைப்பாட்டை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உறுதியாகப் பின்பற்றுகிறது என்பதை இங்கு வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறேன். பிக்ஹு சட்டங்கள் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுகளில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஒரு கருத்தை மாத்திரம் வலியுறுத்தும் மத்ஹபாக இருக்க விரும்பவில்லை என்பதே இதன் விளக்கமாகும். இதனால் கருத்து வேறுபாடுகளை பயன்படுத்தி சமூகத்தில் பிளவை உண்டுபண்ணும் அவலத்திற்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வழியமைக்கவில்லை.
உதாரணமாக ஜமாஅத்தில் “நிகாப்” அணியும் பெண்கள் இருக்கிறார்கள் “நிகாப்” அணியாத பெண்களும் இருக்கிறார்கள். நெஞ்சில் தக்பீர் கட்டுபவர்கள் இருக்கிறார்கள் நெஞ்சுக்குள் கீழ் தக்பீர் கட்டுபவர்களும் இருக்கிறார்கள். இந்த நடைமுறை ஜமாஅத்தின் கட்டுக்கோப்பை உடைக்கும் காரணியாக எப்போதும் இருந்ததில்லை.
சமூகத்தின் கட்டுக்கோப்பு உடைந்திருப்பதற்கான காரணங்களுள் முக்கியமானது அமல்களில் உள்ள அனுமதிக்கப்பட்ட கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தை வலியுறுத்தி மற்றையதை பிழை என்று நிறுவ முயற்சிப்பதுதான். இந்த வேலையை இன்றும் கூட பல உலமாக்கள் சர்வசாதாரணமாக செய்துகொண்டே இருக்கிறார்கள். கீழுள்ளவர்கள் இந்த வேலையை செய்யும்போது மேலுள்ளவர்கள் சந்தோஷத்திற்காக வேண்டுமானால் ஒற்றுமையைப் பேசிக் கொண்டிருக்கலாம்.

தற்போதைய அசாதாரண சூழலிலாவது “நிகாப்” போன்ற விடயங்களில் ஒரே நடைமுறையை எல்லோரும் பின்பற்றலாமல்லவா? முஸ்லிம் எதிர்ப்புவாதிகளுக்கு எதிராக நாமனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தானே வெற்றி பெறலாம் என்ற கருத்தை சிலர் வலியுறுத்துவதும் இங்கு நோக்கத்தக்கது.

இந்தக் கருத்தும் சரி என்பது போலத் தோன்றினாலும், ஒன்றுசேர்ந்து செயல்பட இதனைவிட இலகுவான வழி இருக்கின்றபோது அல்லாஹ் வழங்கிய சுதந்திரத்தை இல்லாமல் செய்துவிட்டுத்தான் ஒன்றுபடவேண்டுமா என்ற வினா எழுகின்றது.

தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை எதிர்கொள்வதற்கு அனைவரும் சேர்ந்து “நிகாப்” அணிவதுதான் சரி என்று வாதிடுவதை விட (முஸ்லிம் சமூகம் அவ்வாறு செய்த வரலாறும் இல்லை), இலகுவான வழிதான் அவரவர் கருத்தை அவரவர் செயல்படுத்திவிட்டு, “நிகாப்” அணிகின்ற பெண்களின் உரிமைக்காகப் போராடுவதில் அனைவரும் ஒன்றிணைவதாகும்.
அதாவது “நிகாப்” அணியாத ஒருவர் அல்லது நிகாப் அணிவதை சரி காணாத ஒருவர் கூட இப்படிக் கூறவேண்டும்:“நான் நிகாப் அணிவதை சரி காணவில்லை. எனினும், “நிகாப்” அணிவது ஒரு பெண்ணின் விருப்பமும் உரிமையுமாகும். அந்த உரிமையைப் பாதுகாப்பதற்காக நான் போராடுவேன். தனது உடல் அலங்காரங்களை தான் நினைத்தவிதமாக வெளிப்படுத்தி மேற்கத்தேய கலாசார முறைப்படி அரைகுறையாக ஆடை அணிவதற்கு இந்த நாட்டில் ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் இருக்கிறது என்றால், தனது அவயவங்களை மறைத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தை ஒரு பெண்ணுக்கு ஏன் வழங்கக் கூடாது? அந்த சுதந்திரத்தைப் பறிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.”
ஆக “நிகாப்” அணிவதில் அனைவரையும் ஒன்று சேர்ப்பதுவல்ல (சேர்க்கவும் முடியாது) இதற்குத் தீர்வு. “நிகாப்” அணியும் ஒரு பெண்ணின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அனைவரையும் ஒன்று திரட்டுவதுதான் தீர்வு அதுதான் இலகுவானதும்கூட. இத்தகைய அணுகுமுறையினூடாகத் தான் முஸ்லிம் சமூகத்தை ஒன்றுசேர்க்க முடியுமே தவிர, ஒரு சாரார் முன்வைக்கும் பிக்ஹு சட்டத்தினடிப்படையில் அனைவரையும் ஒன்று சேர்ப்பது சாத்தியமானதல்ல.

சம்பிரதாய முஸ்லிம்கள்
முஸ்லிம் எதிர்ப்புவாதிகள் முஸ்லிம் சமூகத்தை நன்கு மோப்பமிட்டு நாடிபிடித்துள்ள மற்றுமொரு விடயம்தான் “சம்பிரதாய முஸ்லிம்கள்” என முஸ்லிம்களின் ஒரு சாராருக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர்.

அவர்கள் விரித்திருக்கும் இந்த வலையில் முஸ்லிம் சமூகம் விழுந்து விடாமல் பாதுகாப்பது இன்றைய சூழலில்நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாகும். என்னைப் பொறுத்தவரை “ஹலால்” மற்றும் “நிகாப்” போன்ற விவகாரங்களைவிட இது ஆபத்தானது. காரணம், இந்த வலையில் முஸ்லிம் சமூகம் விழுந்தால் அது கிழக்குப் பாகிஸ்தானும் மேற்குப் பாகிஸ்தானும் போலாகிவிடும். முஸ்லிம் சமூகம் இந்த சதிவலையிலிருந்து வெளியேறுவதற்கான வழியை நிதானமாக சிந்திக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. அவற்றுள் ஓர் அமைப்பைப் பற்றி இன்னுமோர் அமைப்பிடம் விசாரித்தால் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் என்ன கூறுவார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் நாங்கள் சரி அவர்கள் பிழை என்று நாம் நீண்ட காலமாக எமது சமூகத்தினுள் பேசி வந்த பாஷையிலேயே விளக்கமளிப்பார்களா? அல்லது முகஸ்துதிக்காக எங்களுக்கு மத்தியில் எந்த வேறுபாடுமில்லை என்று பொய்யுரைப்பார்களா?
இரண்டும் இஸ்லாமுமல்ல சாணக்கியமுமல்ல. முன்னைய பதிலைக் கூறினால் அவர்கள் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் கோடரிக் காம்புகளாக இருப்பார்கள். பின்னையதைக் கூறினால் சூழலையும் சாணக்கியத்தையும் விளங்காதவர்களாக இருப்பார்கள்.

இந்த இடத்தில் தெளிவாகவும் உண்மையாகவும் நாம் பதில் கூற வேண்டும். அதுதான் முஸ்லிம் சமூகம் சதிவலையில் சிக்காது வெளியேறுவதற்கு உதவும் வழி.
நாங்கள் கூறவேண்டும்:

“இஸ்லாமிய நடைமுறைகள் (அமல்கள்) சிலவற்றில் ஒரு கருத்தும் இன்னும் சிலவற்றில் பல கருத்துமுள்ளன. பல கருத்துள்ள நடைமுறைகளில் ஒரு குழு ஒரு விதமாகவும் மற்றுமொரு குழு இன்னுமொரு விதமாகவும் செயல்படுகிறது. ஒரு கருத்துள்ள விடயத்தில் அனைவரும் ஒரே விதமாக செயல்படுகிறார்கள். (உலக பௌத்தர்கள் மத்தியில் மதகுருமார்கள் திருமணம் செய்யலாமா, கூடாதா என்ற கருத்துவேறுபாடு இருப்பதுபோல) இந்த நடைமுறை வேறுபாடுகள் எமக்குள் சில அநாவசியமான சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளனவே தவிர, நாமனைவரும் முஸ்லிம்கள்தாம். எமக்குள் சம்பிரதாய முஸ்லிம்கள், தீவிரவாத முஸ்லிம்கள் என்ற வேறுபாடு இல்லை.

” இவ்வாறு உண்மையுடனும் சாணக்கியமாகவும் நாம் பதில் கூறத் தவறினால் எமது Goal இற்குள் நாமே பந்தை அடித்து எதிரிகளுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது போன்றிருக்கும்.

முஸ்லிம் சமூகம் ஒரு பிரச்சினை வரும்போது அடுத்தவர்களைப் பார்ப்பதை நிறுத்தி தன்னை ஒரு முறை பரிசீலனை செய்து கொள்ளப் பழக வேண்டும். பிழையைத் தன் பக்கம் நிறுத்தி சிந்தித்தால் பிரச்சினையிலிருந்து வெளியேறுவது சுலபம். பிழையை எதிர்த் திசையில் நூறு விதம் வைத்து விட்டால் பிரச்சினையில் வீழ்வதைத் தவிர வெளியேறும் மார்க்கம் அடைபட்டுவிடும். அல்லாஹ் அறிவையும் சாணக்கியத்தையும் தந்து எம்மைப் பாதுகாப்பானாக!

------------------
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அமீர் - இலங்கை ஜமாஅதே இஸ்லாமி